திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.38 திருமயிலாடுதுறை
பண் - தக்கராகம்
கரவின் றிநன்மா மலர்கொண்டே
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே.
1
உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.
2
ஊனத் திருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண் டடிபேணுந்
தேனொத் தினியா னமருஞ்சேர்
வானம் மயிலா டுதுறையே.
3
அஞ்சொண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்
துஞ்சும் பிணியா யினதானே.
4
(*)தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே.

(*) கணியார் என்றும் பாடம்.
5
தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே.
6
அணங்கோ டொருபா கமமர்ந்து
இணங்கி யருள்செய் தவனூராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலா டுதுறையே.
7
சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலா டுதுறையே.
8
ஞாலத் தைநுகர்ந் தவன்றானுங்
கோலத் தயனும் மறியாத
சீலத் தவனூர் சிலர்கூடி
மாலைத் தீர்மயிலா டுதுறையே.
9
நின்றுண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே.
10
நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com